போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம்

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவை இலங்கை அரசு நிராகரித்தது

by Natkeeran on Mar.12, 2010, under Uncategorized

இலங்கையில் நடந்த கடசிப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க என ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு ஒன்று திட்டமிடப்படுவதாக பான் கி மூன் தெரிவித்தார்.  இதை இலங்கை அரசு தேவை அற்ற தலையீடாக நிராகரித்துள்ளது.  மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் புலி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் விசமப் பிரச்சாரம் என்றும் இலங்கை சனாதிபதி கூறினார். 

இது தொடர்பான பிபிசி செய்தி

Leave a Comment :, more...

ஊடகச் சுதந்திரம் மீறப்படல்: ரொறன்ரோ உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது

by Natkeeran on Feb.23, 2010, under ஊடகச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்

ரொறன்ரோவில் வெளிவரும் வாரந்த தமிழ் பத்திரிகை உதயன் அலுவலகம் இனம் தெரியாத குழுவால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.  செய்திகளின் படி இலங்கை – கனடா வணிகப் பேரவயின் தலைவர் செல்லத்துரை இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவை சந்தித்து பேசிய செய்தி முதற்பக்கத்தில் வெளிவந்ததால் இது நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.  கனடாவில் நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மான தேர்தல் பற்றியும் உதயன் முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடாதால், அப்பத்திரிகை முன்னர் தமிழ்க் சில தமிழ் கடைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தமிழர்கள் பாரிய மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள்.  கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சுத் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரங்களுக்குகாகப் போராடுபவர்கள்.   குறிப்பாக கனடா நாட்டில் இச் சுதந்திரங்களுக்கு தரப்படும் மதிப்பை நாம் அறிவோம்.  அப்படி இருந்தும், நம்மில் சிலர் இந்த மாதிரி மனித உரிமைக் குற்றச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியது, கண்டிப்புக்குரியது.  மனித உரிமைகளுக்கான விழுப்புணர்வும் போராட்டமும் உள்ளே இருந்து எழ வேண்டும்.

Leave a Comment :, , , more...

இனங்களின் விடுதலைக்கு அடிப்படை மனித உரிமைகளே

by Natkeeran on Feb.03, 2010, under மனித உரிமைகள்

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், நகர்வுச் சுதந்திரம், கூடல் சுந்தரம், ஊடகச் சுதந்திரம், தன்னாட்சி உரிமை, நீதியின் முன் சமநிலை, சம சந்தர்ப்பம் போன்ற மனித உரிமைகள் வெறும் கருத்து நிலை உரிமைகள் மட்டுமல்ல.  மனித உரிமைகள் மனிதர்கள் அனைவருக்கும் இயல்பாக இருக்கும், விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத, சட்ட அரசியல் வடிவங்கள் உடைய உரிமைகள் ஆகும்.  இவை ஒரு நீதியான, சமத்துவம் மிக்க, திறந்த, பன்முக, பல்பண்பாட்டு, மக்களாட்சி சமூகத்துக்கான அடித்தளங்கள் ஆகும்.  எங்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அங்கு மனித விடுதலை சிறைப் படுகிறது, மனித ஆற்றல் வீணாகிறது, வன்முறை ஆட்சிக்கு வருகிறது. 

 
சுதந்திரங்கள் மிக்க கனடா நாட்டில் வாழும் எமக்கு, இந்த சுந்திரங்களின் விளைச்சலை நன்கு அறிவோம்.  உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் வெறும் ஆவணம் மட்டுமல்ல, அது சட்ட, அரசியல், சமூக தளங்களில் மதிப்பு பெற்ற, நடைமுறைப்படுத்தப்படும் ஏற்பாடு ஆகும்.  இப்படி சுந்திரங்கள் இல்லாத நாடுகள் பலவற்றையும் நாம் அறிவோம்.  வட கொரியா, சீனா, ஈரான், சூடான், இலங்கை என இப் பட்டியல் நீளுகிறது. படுகொலை, கடத்தல், காணாமல் போதல், சித்ரவதை, தடுத்து வைத்தல், நியாமற்ற கைதும் தடுப்பும், ஊனமாக்கல், உடமை பறித்தல் என்பவை இந்த நாடுகளில் நித்தம் நிகழ்பவை. 
 
திடீர் என்று உமது மொழி உரிமை இழந்தால்.  உமது சமயம் புறக்கணிக்கப்பட்டு, வேறு சமயம் அரியணை ஏறினால்.  ஆட்சியில் பங்கில்லை, அரசில் வேலை இல்லை என்ற நிலை வந்தால்.  கல்வியில் திறமைக்கு மதிப்பில்லை என்று மறுக்கப்பட்டால்.  ஒருநாள் குண்டர் படை வந்து தொழிலைப் பறித்து, நிலத்தைப் பறித்து, வீட்டைக் கொழுத்தினால்.  கைது செய்து, சித்ரவதை செய்து, சிறையில் கொலை செய்தால். நிர்வாணம் ஆக்கி, கையை பின்னுக்கு கட்டி சுட்டுப் போட்டால்.   எல்லோராலும் போற்றப்பட்ட பொது நூலகத்தைக் கொழுத்தினால்.  இது இலங்கையின் வரலாறு.  சமூகம் எப்படி இதை அனுமதித்தது, அரசு எப்படி இப்படி செயற்பட்டது, சட்டம் எப்படி செயலிழந்தது என்பவை இங்கு கேள்விகளாய் எழுகின்றன. 
  
மனித உரிமைகள் பேணப்படாதால்தான் இலங்கை சீரழிந்த ஒரு நாடு ஆனதற்கு முதன்மைக் காரணம்.  பின் வரும் புள்ளி விபரங்களை நோக்குக, இவை இலங்கை மனித உரிமைகள் மீறுவதில் மிக மோசமான நாடுகளில் ஒன்று என்பதை துல்லியமாக காட்டுகின்றன.
 
ஊடக சுதந்திர சுட்டெண் – 2008 – 165/173 – (அதி மோசமான நாடுகளில் ஒன்று)
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் – 11,513 (1980-96) ஐநா அறிக்கை, உலகில் இரண்டாம் நிலை.
 
 
இலங்கையில் விழுமிய அடிப்படையிலும், நடைமுறையிலும் மனித உரிமைகள் பேணப்படவில்லை.  சமூக, அரசியல், சட்ட, சமய தளங்கள் எதுவும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை.   இதனால்தான் போர், அழிவு, அவலம் எல்லாம் ஏற்படுகிறது.  இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் ஆவர்.  இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது அனைத்து சமூகங்களின் வாழ்வியலை மேம்படுத்த அவசியமாகிறது. 
 
இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமைகளைப் எப்படிப் பேணலாம், மேம்படுத்தலாம்.  இது ஒரு சிக்கலான இலக்கே.  தொடக்க கட்டமாக மனித உரிமை மீறல்கள் விரிவாக ஆவணப் படுத்தப்பட்டு, உலக அரங்கில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.  பன்னாட்டு மன்னிப்பு அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புகள் இதைச் செய்ய முற்பட்டாலும், இலங்கை நோக்கி இவர்கள் தரக்கூடிய அக்கறை மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது.  இலங்கையில் நடைபெற்ற, நடைபெறும் மனித உரிமை மீறல்களை புறவயமாக, துல்லியமாக, ஆதாரங்களூடன் ஆவணப்படுத்தி, இத்தகைய மனித உரிமை அமைப்புகளுடனும், மேற்குநாட்டு அரசுகளுடனும், மக்களுடனும் பகிர வேண்டியது ஒரு முக்கிய பணியாகும்.  இந்தப் பணியை மேற்கொள்வதை தனது முதன்மை இலக்காகக் கொண்டதே போரினால் பாதிக்கப்படடோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம்.   
 
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் சுதந்திரமாக இயங்கும், இலாப நோக்கமற்ற, கட்சி சார்பற்ற, மனித உரிமைகள் அமைப்பாகும்.  அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை பன்னாட்டு நியமங்களுக்கு ஏற்ப கணினியில் ஆவணப்படுத்தும் பணியை விரைவாக செய்துகொண்டிருக்கிறது.  ரொறன்ரோ மற்றும் கனடிய நகரங்களில் மட்டுமல்லாது வேறு 5 நாடுகளில் இப் பணியை அறிமுகப் படுத்தியுள்ளது. 
 
இந்த நடுவத்தின் இன்னுமொரு முக்கிய பணி மனித உரிமைகள் பற்றிய கல்வியும் விழுப்புணர்வும் ஆகும்.  மனித உரிமைகள் ஒரு சமூகத்தின் விழுமியமாகி, அரசியல் ஏற்புப் பெற்று, உரிய சட்ட வடிவம் பெற்றாலே அவை பேணப்படுத்தலுக்கான உறுதி கிடைக்கும்.  அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த தனி மனிதர்களுக்கும், சிறுபான்மையினங்களுக்கும் இருக்கும் வலுமிக்க வழிமுறை மனித உரிமைகளைப் பேணுவதற்கான சூழலை ஏற்படுத்துவதே. 
 
உலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள் மற்றம் மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன.  யெனீவா உடன்படிக்கை என்பது: போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், போர்க் கைதிகள், காயப்பட்ட எதிரிப்படையினர், மருத்துவ சமயத் துறையினர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை வரையறை செய்யும் அனைத்துலக உடன்படிக்கை ஆகும்.  இது இலங்கை உட்பட 194 நாடுகளால் 1949 ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது.  உலக மனித உரிமைகள் சாசனம் 1949 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதபிமான சட்டங்கள் ஆகும்.  ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உரித்தாக உள்ள உரிமைகள் பற்றிய முக்கிய உலகளாவிய வெளிப்பாடும் இதுவாகும்.  தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது இருக்கிறது.  அண்மையில் இலங்கையில் நடந்த போரிலோ, இன்றோ யெனீவா உடன்படிக்கையோ, அல்லது உலக மனித உரிமைகள் சாசனமோ சற்றும் மதிக்கப்படவில்லை.  இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் இலங்கையில் நடைபெற்ற குற்றங்களை வெளி உலகுக்கு எடுத்துச் சொல்வது அவசியமாகிறது.  இதை ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்ல பாதிக்கப்பட்டோர்  போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவத்தில் தங்கள் பாதிப்புகளை பதிவது அவசியமாகும். 
 
ஈழப் போரும், அதனால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்கள் மனித உரிமை தொடர்பான எமது நடவடிக்கைகள் விரிவாக வேகமாக நிறைவேற்ற எம்மை உந்தியுள்ளது.  இதில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவத்தின் பங்கு கணிசமானதாக இருக்கும்.  இனியும் இன்னுமொரு தமிழர் இனப்படுகொலை இலங்கையில் நடக்காமல் இருக்க நாம் எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்.   
  
Leave a Comment :, , , more...

தேடுக

நீங்கள் தேடியது இல்லை எனில், எம்மைத் தொடபு கொள்ளவும், அல்லது ஓர் இடுககயின் கருத்துப் பெட்டியில் குறிப்புப் போடவும்.

காப்பகம்